Friday, April 29, 2022

ஆமீன்

 

 

ஆமீன்

சேமன் காக்கோவ்...சேமன் காக்கோவ்....

எண்டள்ளோ.எண்டள்ளோ.

என்ட  வா..ப்போ..வ்.

எண்ட..ம்மோவ்.

என்னடா.என்னடா

ஓடியாங்கடோ ஓடியாங்கடோ

சந்தைக்க குண்டு வெடிச்சிட்டுகுண்டுகுண்டு வெடிச்சரோவ்..

ஓர்hர..ஓர்ரா…”

ஏண்டல்லோவாடாவாங்கடாடே..ய்..

மார்க்கட்டெல்லாம்  மய்யத்துக் கெடக்காம் டெஓடியாங்கடோ

எண்ட..ம்மோவ்.

பா.ப்பா.ப்.பீய.ய.ய         

கெதியா  ஓடியாடோவ்.

என்ட புள்ளே..ய் என்ட புள்ளே..ய்

என்ட மகனே...எண்டள்ளோ

வாஹாஏய்.வாடிஓடியாடி.ஓப்பாய்

என்டம்மோ

எக்கோ..வ்.. சந்தைக்க போன ஒத்தரும்  பொளைக்கல்லயாங்கோ..வ்

என்டல்லோ.தம்பீதம்பீ..ய்

“டே...லாபிரு...ஓங்கும்மா வும்  குண்டுல  அம்பிட்டு   மவுத்தானயாம்..சந்திக்க  கெடக்கு    மையத்து...ஒர்ரா..ஒர்ரா...

“என்டம்மோ..வ்...என்டம்மோ..வ்...

“டியே...ஒண்ட  புரிசன்காரன் கைகால் பறந்து  கெடக்கானாம்...ஒர்றி...ஒர்றி...பாரறி ...

“வாப்பாவ்...வாப்பாவ்....

“காக்கோவ்...

“லாத்தோவ்...மச்சானும்  சதை க்க  போனயா...?

ஒன்டாம்பி....என்டம்மோவ்...ஓடிப் போடா...போய்  பார்ராம்பி ...

காக்கோவ்சேமன் காக்கோவ்.. என்ன ஹாக்கா.எப்புடி காக்கா?

கத கேக்காம  ஓடியாடா..நாயே…”

எத்துன பேரு காக்கா.?

கெதியா  போடா பார்hராபார்ராஎன்ட ரகுமானே

தம்பியோ..வ்என்ட  தம்பியோவ்.

OOO 


தினச்செய்தி

1992.வரு.செப்டம்பர்.ம. 2 தி. புதன்கிழமை.

சாய்ந்தமருது சந்தையில் குண்டு வெடிப்பு

21 பேர் பலி.! 25 பேர் படுகாயம்.

(கல்முனை நிருபர்.)

கல்முனை சாய்ந்தமருது பொதுச் சந்தையில் வைக்கப்பட்டிருந்த குண்டொன்று வெடித்ததால்  21 பேர் கொல்லப்பட்டனர். 25 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து கல்முனை சாய்ந்தமருது காரைதீவு மற்றும் அதையண்டிய பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது... எங்கும்  ஒப்பாரியும்  ஓலங்களும்  கேட்டவன்னமிருக்கின்றன... கடைகள்,அரச,தனியார் துறை  நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. போக்குவரத்துகள்  முற்றாக  துண்டிக்கப்பட்டுள்ளது...

 

இச்சம்பவத்தில் மீன் மார்க்கட்  முற்றாக சேதமுற்றது..  கொல்லப்பட்டவர்களின் சடலங்களையும்  காயமுற்றோரையும்  காரைதீவு  விஷேட  அதிரடிப்படையினரும்  கல்முனைப் பொலிசாரும்  ஆஸ்பத்திரிகளுக்கு  தங்கள்  வாகனங்களில் எடுத்துச் சென்றனர்... . இச்சம்பவத்தில்  கொல்லப்பட்டோர் அனைவரும்  முஸ்லிம்களே ஆவர்..  கொல்லப்பட்டோரின்  பத்து  சடலங்கள் அம்பாறை  ஆஸ்பத்திரியிலும்,  ஐந்து பேரின் சடலங்கள் கல்முனை  ஆஸ்பத்திரியிலும்,  சாய்ந்தமருது வைத்தியசாலையில் எழு பேரின்  சடலங்களும்  வைக்கப்பட்டுள்ளன..  இச்செய்தி  அச்சுக்குப் போகும் வரை  பத்துச் சடலங்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளன.. அவற்றின் விபரம்  வருமாறு...................

OOO 

“சேமன் காக்கா... சேமன் காக்கா......எண்ட  புள்ளையப் பாருங்க  காக்கா.....எண்டல்லோ.. வாய் வவுறு  பத்துது ....”

“சரி...சரி... பொறுஹா ...பொறுஹா...டேய்... இஸ்மாயீல்...நம்மட  கார  எடுத்துட்டு  வாடா...கெதியா....ஓடு...ஓடு...தம்பி  ஜப்பாரு...நீ  ஒடன  ஓடிப் போய்  நம்மட  மினிஷ்டருட்ட  கோள் எடுத்து  வெஷயத்தச் செல்லிட்டு  ஓடியா,,,,ஓடு..ஓடு...”

“:சேரி ஹாக்கா .....

“தூக்குடா...தூக்குடா.. ஏத்துடா...

“அந்த காருல  ஏத்திட்டு போடா...கெதியா..

“மம்மாக்கானுக்கு உசிரு இருக்கு....கெதி பண்ணு...கெதி பண்ணு...

“இன்னா...கை ஒண்டு  தனிய  கெடக்கு...ஆற்றையோ....

“எடு ..எடு ...வேறயா  வெய்....

‘’லாத்தாவ  தூக்குடா...தூக்குடா...

‘’என்டம்மோவ்....

‘’கொளராத...கொளராத....ஏத்து ...ஏத்து....

“கடக்கர ஆஸ்பத்திரிக்கி  எடுத்துட்டு  ஓடு...கெதியா...

“சீல வேணும்..மையத்தைக் கட்டனும்...ஜப்பாரு...ஓடிப் போய் கடையில வெல்லச் சீல  வாங்கிட்டு  ஓடியா ..கெதியா

“எரத்தம்  வ்வாறு  வெய்க்கிது...கட்டு..கட்டு...

“செரி  சேமன் காக்கா

தே.. கொட்டுக்கத்தி...!  இதக்  கேளுடா ... ஊருக்க மேசன்,ஓடாவி  வேலைக்கு  வந்த  ஒரு தம்ழனும்  ஊட்ட  திரும்பிப் போக  உடக்கூடா...வெட்டி..குத்தி,..அரியனும்...மாக்கொத்த  தம்ளன் செஞ்ச  வேல....கெதியாப் போடா...நம்மட  ஆக்கள  செட் பண்ணி  கூட்டிட்டு  வா...

“வந்துட்டானுகள்  ஹாக்கா...

“வேன்  ஆர்ரா..? ஊர்ல  வென  நான்  காணல்லியே  ஒரு நாளும்...

“மையாண்ட  பேரன்  காக்கா  நான்... அந்த அளிவாச்சாட  கொலைக்கேசில...?

“ஞா..நீயானா..அது... ஒன்னப் போல ஆளுதான்ன்டா  வேணும்...வா..வா..

“மையத்து  வேலைய நாங்க பாத்துக்கிரம்... நீங்க  அந்த வேலையப் பாருங்க... தோக்கு  வேணா.... கத்தி  எடுத்துக்கங்க. எல்லாரும்.. ஊர்ல  ஒரு  ரவுண்டு  அடிச்சி  எங்க  கண்டாலும்  தம்ளன  மாடு போடுங்க......ஓடு. ஓடு....

“டேய்... சதக்கன்...வாடா...

“எண்ட  ஹாக்கோவ்....இவடத்த  மீன் வெட்டிக்கிட்டிருந்த  எண்ட  தம்பி  சறுக்கு... துண்டு..துண்ட  செதறிட்டான்  கோ.....என்டம்மாவ்வ்...எண்ட  தம்பியோவ்வ்வ்வவ்.

கொளராத..கொளராத...அள்ளா இருக்கான் ...

“எண்ட  அழகு காக்கோவ்... எண்ட  மகளப் பாரு  ஹாக்கோவ்//.

“கத்தாம...தூக்கிட்டு  ஓடண்டா பேயா..ஆஸ்பத்திரிக்கி

“தம்பி... லத்தீப்பு..அசாரு,,,,மொதல்ல . மவ்த்தான  ஆட்கள  வேறயா தூக்கி அடுக்கு... கணக்கெடு... நியாஸ்,,, நீ  காயப்பட்ட  ஆக்கல்ல  வேபரத்த  எடு... ஒரு  லிஸ்ட்டுல  எழுதித் தா...

“அன்னா  எஸ் டி எப் வெருது காக்கோவ்...

“கவுத...கவுதா...ஏய்...பளயாங்.... பளயாங்....

“டக்காலா  கண்ட  ஜீப்ப ஏக்க...

ஒவ்... கேணி யாண்ட..கேநியண்ட...ச்பிரித்தாலாவ...யன்ண்ட ...

“இக்மன் கொரன்ன...

“அனே...மாதத்தையோ...மீ..வளன்ன  மாதத்தையோ...

‘’கட்ட வஹலா  கிடப்பாங்...

“சேரி ஹாக்கா... அன்னா...ஒங்கள  எஸ்டிஎப் .கூப்பிர்ரான்  ஹாக்கோவ்...

“இன்னரம்  என்ன  மசிருக்கு  கூபிர்றான்...சரி  வாறன்...


“மே  மகாத்தயோ...ஓயா  கவத  மெத்தன..?

.”மம   பஷீர் மினிஷ்டர்கே  லேகம்துமா...பளன்ன  லொக்கு மகாத்தயா ஹுத் தெமல  கரப்பு வேடே...

“ஒவ்.. தன  மொன்வாத் கரண்ட வெண்ண  நெஹ... ஓய  மகாத்யா.. மெம கரண்ட.. மீ  ஒகொல்லான்கே  பள்ளி..? பள்ளியட்ட பொடி  மீட்டிங்   ஏக்க  அறஞ்  கரண்ட.. இஸ்சரா... பள்ளி ஸ்பீக்கர் வளின்  கியன்ன...மேம  சிதுவுனா..மகாஜனதா  இவசீம்  கரன்ன  கியலா.....

“இவசீம்  கரன்னத...? கோமத  மஹத்யா  இவசீம் கரண்ட... மேக  பள்ளிவளின்  கியண்ட  புளுவந்த..? .மிநிஸ்ஸு   ஒக்கோம  தனட்ட   தரகுவெலா இன்னே...

“ஹரி..ஹரி... ம் ஹரி  கரன்டமே  ஓனே.. அபி...

“ஹரி  மகத்யா.. தன  ஹெலிகொப்டர்வளின்  அபே  மந்திரிதுமா  என்வா... அபி  கதகரமு...

“எஸ் டி எப்பு  மாத்தியோ...எண்ட  புள்ளையப் பாருங்க.. எண்ட  புள்ளையப் பாருங்க.... கையில்லே.. ஒரு காலில்லே...என்டல்லோவ்....

“ஹரி..ஹரி..நோனா...பொட்டக் இன்னங்கோ ....மே...டக்காலா  ஸ்பிரித்தியலயக்கட்ட ..கேணி யண்ட...

“என்டல்லோவ்....எண்ட   மகளப் பார்த்தியா காக்கா...?  வாழக் குருத்துப் போல  இருந்தவள்....கொடல் சிதறிக் கிடக்கிரத்த பாரு காக்கோவ்....

“எக்கோவ்...ஆஸ்பத்திரிக்கி  கொண்டு  போஹா...அன்னா எஸ் டி எப்பு  ஜீப்புல...கூப்பிர்ரான்...போ..போ... டே  தம்பி  லத்தீப்பு...தூக்குடா..தூக்குடா..நீயும்   கூடப் போஹா லாத்தா..

“எண்ட  ரகுமானே... எண்ட  தம்பியே...எண்ட  ராசாவே....

“வாப்பா....வாப்பாஒவ்.....எங்கு  வாப்போவ்.....

 

௦௦

 

அல்லாஹு  அக்பர்....அலாஹு  அக்பர்....

பொதுமக்கள்  அனைவருக்கும்  முக்கிய அறிவிப்பு .....இந்த வெசயம்...குண்டு வெடிச்ச...எஸ்.டி எப்பு... செல்றது...ஊரடங்கு சட்டம்....மீறி...சுடப்படும்....’’

டேய்...கோழி மோதின்  ஞை ஞை..ஞாஈஈ ண்டு  கதையாம ...மைக்க  மாஷ்டருட்ட  குடுடா...

“அஸ்ஸலாமு அலைக்கும் ,,,பொதுமக்கள் அனைவருக்கும்  முக்கிய  அறிவித்தல்.. பயங்கரவாதிகள்  நமது  சந்தைக்குள் வைத்த  குண்டு  வெடித்ததில்  பல பேர் கொல்லப்பட்டுள்ளனர்.. இது விடயமாக  பள்ளி நிர்வாகமும்  காரைதீவு  விஷேட அதிரடிப் படையினரும்  கல்முனை  பொலிசாரும் இணைந்து தேவையான நடவடிக்கை  எடுத்து வருகின்றனர்.. உரிய நடவடிக்கைகள்  செய்யப்படும்.. பொதுமக்கள்  அமைதி காக்குமாறு  வேண்டப் படுகின்றனர்.. நமது  பாராளுமன்ற  பிரதிநிதிகள்  கொழும்பிலிருந்து  வந்து கொண்டிருக்கின்றனர்..

 

மேலும் கல்முனை பொலிசாரினால்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது...ஆகையால்  அனைவரும் தத்தம் வீடுகளுக்கு செல்லுமாறு  வேண்டப்படுகிறீர்கள்...

இதை மீறி கலவரங்களில்  ஈடுபடுவோருக்கு  எதிராக  துப்பாக்கிச் சூடு  நடத்தப்படும்..

௦௦

 

‘’ சேமன் காக்கோவ்...

“என்னடா...ஜப்பாரு,,,

“சேமன் காக்கோவ்... மூணு  தம்ளாக்கள  புடிச்சி மாடு போட்டுட்டுட்டானுகள்

“ஆர்ரா..?

“நம்முட  ஆக்களும் ..எஸ் டீ .எப்பும் ...

“எங்கடா...?

“கடக்கரையில...சவம்  டயரு போட்டு  பத்துது...

“ஆரையும்  கடத்தி வச்சிருக்கானுகளா..?

“அம்பாரையில  இருந்து  வந்த  பஸ்ஸ  மறிச்சி ரெண்டு  பேர  இழுத்துட்டானுகள்  ண்டு  கேள்வி...செரியா தெரியல்ல  காக்கா....

“நம்மட  ஆக்கள்..?

“கரதீவுக்குள்ள நம்மட   கோளியாவாரி மையதீன் போனவன்  இன்னும்ம்  வேறல்லியாம்  காக்கா..

“பெறச்சின  பெரிசாகும்  போல..

“உடுவானுஹளா ஹாக்கா.. சும்மா மார்க்கட்டுக்குப் போன  அப்பாவிச் சனன்த்த  குண்டு  வெச்சி  சாஹா வெச்சா  சொந்தக்காரன்  காக்கா தம்பி  உடுவானுகளா  ஹாக்கா...?

‘’சரிதான்... வா.. ஊருக்க  போய் பாப்பம்...ஏறு...

௦௦

 

சாய்ந்தருது குண்டு வெடிப்பு

--------------------------------------------------

சூத்திரதாரிகள் காரைதீவு தமிழ் கிராமத்திலேயே இயங்கினர்.

சாய்ந்தமருது  சும்மா பள்ளிக்குச் சொந்தமான  பொதுச் சந்தையில் தமிழ்ப் பயங்கரவாதிகள்  குண்டொன்றை வெடிக்க  வைத்ததில்  பொதுமக்கள் 23 பேர் ஸ்தலத்திலேயே பலியாகினர். மேலும் 28 பேர்  படுகாயமடைந்து ஆஸ்பத்திரிகளில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இச்சம்பவம் பற்றிய  முழு விபரம் வருமாறு,,,

சாய்ந்தமருது  பொதுச் சந்தை ஓரமாக  மரக்கறி வியாபாரி  ஒருவருக்குப் பக்கத்தில்  ஐஸ்பழ பெட்டி ஒன்று லுமாலா சைக்கிள் ஒன்றில்  கட்டப்பட்ட நிலையில்  காலை  எட்டு மணி முதல்  ஒரு தமிழ் வாலிபன்  நின்றுள்ளான். அவன் அங்கு  நின்று கொண்டு எதையோ  தேடுவது போல் பாசாங்கு பண்ணிக் கொண்டு  அச்சந்தையின் ஓரத்தில்  முந்திரி விதை விற்றுக் கொண்டிருந்த  ஒரு தமிழ் பெண்மணியை  அங்கிருந்து செல்லுமாறு கேட்டுள்ளான்.  இதனை அவதானித்துக் கொண்டிருந்த  அச்சந்தையில்  சிறுபெட்டிக் கடை ஒன்றினை  வைத்திருக்கும் அகமது லெப்பை ஆசியா உம்மா  அல்லது  அச்சி முத்து (5௦ வயது) என்பவர்  இவன்மீது  சந்தேகப்பட்டு  அவனை அங்கிருந்து அகன்று செல்லுமாறு  வேண்டிக் கொண்டுள்ளார்.. அப்போது  அவன்  தேநீர் கடைக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டு  சென்ற சமயம்  அப்பெட்டிக்குள்  மறைத்து வைக்கப்பட்டிருந்த  சக்தி வாய்ந்த  குண்டொன்று  சரியாக  காலை 10.30 க்கு வெடித்துள்ளது.

இக்குண்டு வெடிப்பினால் ஸ்தலத்திலேயே 23 பேர் கொல்லப்பட்டனர். 70பேர் படுகாயங்களுடன் சாய்ந்தமருது-கல்முனை-அம்பாறை-கொழும்பு ஆஸ்பத்திரிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.  கொல்லப்பட்டோரின் விபரங்கள் வருமாறு...

முகம்மது காசிம்  உதுமானாச்சி (57) சாய்ந்தமருது.-1- முகம்மது தாசீம்  முகம்மது  தஸ்ரிக் (05) சாய்ந்தமருது.-1 –உதுமாங்கண்டு  அகமது லெப்பே-(56)- சாய்ந்தமருது.-3-- உதுமாலேப்பே ஆதம்பாவா(46) சாய்ந்தமருது.-1---உதுமாலேப்பே முகம்மது சரூக்-(45) சாய்ந்தமருது.-2 இப்ராஹிம் முகம்மது காசீம்-(60)- சாய்ந்தமருது.-7-- மீராசாஹிப் முகம்மது  அனீபா –(43) சாய்ந்தமருது.-7---  சீனிமுகம்மது மீராசாஹிப்-(50)- சாய்ந்தமருது.-2--  அபூபக்கர் மீராசாஹிப்-(56)- சாய்ந்தமருது.-8 முகமத் அலியார்-(48)- சாய்ந்தமருது.-1-- முகமத் தாஜுதீன்-(27)- சாய்ந்தமருது.-7-- ஆதம்பாவா முகமத் ஜின்னாஹ்-(25)- சாய்ந்தமருது.-4 உதுமாலேப்பே சகாப்தீன்-(35)- சாய்ந்தமருது.-1--- முகம்மது செயின் (50)---தகப்பன்)- செயின்  நஸ்ரின் (மகள்-18-)- சாய்ந்தமருது.-1--- முஸ்தபா ரசாக்-(17)- சாய்ந்தமருது.-3-- இஸ்மாலேப்பே ஆதம்பாவா (34)- சாய்ந்தமருது.-8– முகம்மது இஸ்மாயில் அப்துல் ஜலீல் –(31)- சாய்ந்தமருது.-2--- முகைதீன்பாவா பக்கீர்முகைதீன்-(60)- சாய்ந்தமருது.-3-- முகம்மது இஸ்மாயில்-(35)- சாய்ந்தமருது.-3--- அப்துல் லத்தீப்-(24) சாய்ந்தமருது.-1---  ஆதம்பாவா ரஷீனா-(14)- சாய்ந்தமருது.-6--- ஆதம்பாவா சுலைகா உம்மா-(57)-- சாய்ந்தமருது.-6-

 

சாய்ந்தமருதுவின்  அயல் கிராமமான  காரதீவு என்னும் தமிழ்க் கிராமத்தில்  இருந்தே  இக்குண்டு வெடிப்பின்  சூத்திரதாரிகள்  இயங்கி உள்ளனர். என்பது தற்போது  பாதுகாப்பு படையினராலும்  ஏனைய  அவதானிகளாலும் ஊர்ஜிதப்படுத்தப் பட்டுள்ளது.  இக்குண்டு வெடிப்பை யடுத்து  சில அசம்பாவிதங்கள்  தலைதூக்கின.

௦௦

 

‘’ சேமன் காக்கோ ..இதான்  ஊடு...

‘’க்கூப்பிர்ரா....

“ஆசியாரே .மம்மக்காசிம் .ஆசியாரே...

“என்னம்பி ..?

“எங்க...ஒங்குட  ஊட்ட  வேல செய்ய வந்த  மூணு தம்ளனுகள்...?

“அப்பிடி  ஒத்தரும்  வெரல்லம்பி

“டூப்  உடாத  ஆசியார்...உங்கட  ஊட்ட  கூலி வேல  செய்ய  காலத்தால  வந்த  மூணு  தமிழ்ப் பொடியனுகளும்  எங்க...? ஊட்டுக்க ஒளிச்சி வச்சிரிக்கிரியா...?

“என்னம்பி..மடத்தனமா  கதைக்கிறீங்க....இஞ்ச  வெரல்ல...

“ஆசியாரே...சந்தைக்க  தமளன்  குண்டு  வெச்சி  எத்தினையோ  பேரு மௌத் தாகிட்டாணுக ...நீ  தம்ளன  ஊட்டுக்க  ஒளிச்சி வெச்சி சோறு  குடுக்காய்  லா..?  ஆக்கள  வெட்டால  உடு...இல்லாட்டி  ஊட்டுக்க  பூருவம்...

“என்னம்பி..மடத்தனமா  கதைக்கிறீங்க....இஞ்ச  வெரல்ல...வேணுமண்டா  ஊட்டுக்க  வந்து பாருங்களன் .....

“எங்களுக்கு  சுவராத் தெரியும்... இஞ்ச  வந்த  மூணு  தமுளன் ....

“டே...கருவாட்டாசிர  கதைய உட்டுட்டு  வாங்கடா  ஊட்டுக்க  போய் பாப்பம்... ஆரும்  உள்ளுக்கு  இருந்தா...?  மம்மக்காசிம் ஆஸி...ஒண்ட  தல  பறக்கும்

“என்ன  சேமன் காக்கா.......மடத்தனமா.. நீங்க  பாருங்களன்.. நம்முட  சனம் சாகக்க  நான்  தம்ளனுக்கு சப்போட்டு  பண்றா..?. நொட்டின  கத கதைக்கிங்க ..

“டே... ஆரிப்பு....பாறுக்கு... உள்ளுக்க  போய்  மூல  முடிச்செல்லாம்  பார்ரா..தம்ளன்  ஒளிச்சிருக்கானா  எண்டு...பார்ரா...

“பாருங்க..பாருங்க...

......................................

உள்ளுக்கு  ஒருத்தனும்  இல்ல  ஹாக்கா...

“நெல்லாப்  பார்த்தியாடா...?

“ஓம்..காக்கா...நெல்லு  மூடதான்  அடுக்கியிரிக்கி...ஒத்தனும் இல்ல...

“சுவரா  வந்த...மூணு  தமுளனுகள்...எண்ட  கண்ணால  நான்  கண்ட..? டே..ஆஸி...செல்லுறா...எங்கடா  அவனுகள்...?

“ங்கா... அவனுகளா... அவனுகள்  குண்டு வெடிச்ச எண்டு  கேள்விப் பட்ட  ஒடனே  ஓடிட்டானுகள்  தம்பி...நிண்ட  எடத்துக்கும்  வெசளம் செல்லாம...எங்கால போன  எண்டும்  தெரியா....

“ஆஸி..பச்சைப் பொய்  செல்றான்.. சரி வா...ஆசிர  மில்லுக்க போய் பாப்பம்..அங்கான்  ஒளிச்சி வெச்சிரிப்பான்... ம்மாக்கொக்க...அங்க  புடிபட்டா...ம்மாக்கொத்த  ஆஸி  ஒண்ட  மில்லு  பத்தும்....ஒவ்..... கெதியா வாங்கடா...

“எண்டல்லோ...எண்டல்லோ....

“எங்கடி...ஆசிர பொண்டி...எங்கடி  வந்த  தம்ளனுகள்....?

“ஆரப் பாத்துரா  டியே ண்டு  செல்றாய்...செருப்பால  அடிப்பன்...

“பொத்துரி  வாய...ஆசிர வெண்டி....தம்ளன  பாவாடைக்க வெச்சிட்டு இருப்பாய் நீ...செல்ல  ஏலா...

“கருமக்காரா....கருமக்காரா...ஆஹுமாடா...ஆஹுமாடா ?

“டே..தம்பிமாரு...கொம்புலயளுட்ட  கதைக்கிற  கதையாடா  இது...இஞ்ச  ஒரு  தம்லனும்  வெரல்ல...நாங்க  ஒளிச்சி  வைக்கையும் இல்ல...போங்க...வேற எங்கண்டான  போய்  பாருங்க...

0OOO 

“புள்ளே ...ஷைதா ...லக்கோவ் ...இவனுகள் போயிட்டானுகளா ண்டு வெட்டால போய் எட்டிப் பாருஹா .....

“போயிடடானுகள்.. அது செரி.. இஞ்ச  வந்த  அந்த மூணு தமிழ்ப் பொடியனுகளும் எங்கங்க ..? மடத்தனமா  மில்லுக்க கொண்டு ஒளிச்சி வெச்சிட்டீங்களா.. என்டல்லோவ்...மில்ல  பத்த வெச்சிப்  போட்ருவானுகள்...கருமக்காரனுகள்..

“சத்தம் போடாதஹா .பண்டி...  மூணு பேரும் இன்ஜான் ... உள்ளுக்க  நெல் அறைக்க  இருக்கிற  பட்டறைக்குள்ள  ஒளிச்சி வெச்சிருக்கன் ...

“எண்டே  செல்ல  ரகுமானே....என்டல்லோவ்...பைத்தியமா..ஒங்களுக்கு..? ஆரும் கண்டா என்னத்துக்காகும்..? ஊரு  இருக்கிற  நெலமையில,,,?

“அய் செரிதான் ஷைதா...புள்ளே... ஆனா  நம்மள  நம்பி  வந்த  அந்தப் பொடியனுகள நம்மளே காட்டிக் குடுக்கலாமா...? அவன்ட  சாதி  குண்டு  வெச்சான்.. எண்ட சொந்தக்காரனும்  அதுல  அம்புட்டு மவுத்தானான்... அதுக்கு  இவனுகள்  என்ன புள்ள  செய்யிற...இவனுகளா  குண்டு  வெச்ச...? ஏளப் பொடியனுகள்..பாவம்...

“இப்ப  என்ன  செய்யப் போறீங்க,,,? இவனுகள  எப்பிடி இஞ்ச  வெச்சிருக்கிற..? லூஸா  ஒங்களுக்கு....?

“கொஞ்சம்  பொறு...ஊரு  அடங்கட்டும்.. நம்முட லொரியில  நெல்லு மூடக்க  வெச்சிக் கட்டி...ஊருக்கு  அங்க்கால  கொண்டு போய் உட்ருவம்..பாவம்.. அள்ளா பார்த்திருக்கான்..எல்லாம்  அவன்  படச்ச  உசிருதான் ....இப்ப  மூணு பேருக்கும்  கொஞ்சம்  சாப்பாடு  ஆயத்தப்படுத்தி தா...புள்ள ..

‘’எண்ட ரகுமாணே ....

௦௦

 

.

ஜனாதிபதி ஆர்.பிரேமதாச கண்டனம்- கொல்லப்பட்டோருக்கு அனுதாபம்

அமைதியை  நிலை நாட்டுமாறு படைத்தளபதிக்கு  உத்தரவு...

பிரதமர்  அனுதாபம்

பாதிக்கப்பட்டோருக்கு துரித நிவாரணம் வழங்கப் பணிப்பு

 

முஸ்லிம்  அமைச்சர்கள்,எம்பிக்கள்  சாய்ந்தமருதுக்கு  விரைந்தனர்.

சம்பவம் நடந்த  இடத்துக்கு  அமைச்சர்களான பி. தயாரத்ன ,, ஏ.ஆர். மன்சூர் ,, எம்.ஏ. அப்துல் மஜீத், ராஜாங்க  அமைச்சர்  ஏ எச்.எம். அஸ்வர்  ஆகியோர் ஜனாதிபதியின் பணிப்பின் பேரில்  விரைந்து  வந்து  பார்வையிட்டனர்.. 

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  எம்.எச்.எம். அஷ்ரப் எம்.பி.  குண்டு வெடிப்பு இடம்பெற்ற  மறுநாள் விஜயம் செய்து  மரணமடைந்த சகலரினதும்  வீடுகளுக்கு  கால்நடையாகவே சென்று  ஆறுதல் வார்த்தை கூறியதுடன் மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறா திருப்பதை உறுதி செய்யுமாறு பாதுகாப்புப் படையினரை வேண்டிக் கொண்டதுடன்  வாலிபர்கள்  கட்டுப்பாட்டுடன் நடந்து  கொள்ள வேண்டுமென்று  அறிவுறுத்தலும்  வழங்கினார்.

சாய்ந்தமருது  குண்டு வெடிப்பு

மேலும் தீவிர  நடவடிக்கை எடுப்பது பற்றி

பாதுகாப்பு  அமைச்சு பரிசீலனை

கொள்ளுப்பிட்டி கிராமோதய மண்டபத்தில்  நடைபெற்ற  விஷேட செய்தியாளர் மகாநாட்டில் கூட்டுப்படை தலைமையகப் பேச்சாளரான  கேணல் சரத் முனசின்ஹா பத்திரிகையாளரின்  கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

கே- இச்சம்பவத்தில்  எத்தகைய குண்டு வைக்கப்பட்டது..?

ப- பிளாஸ்டிக் குண்டு ஒன்றே  ஐஸ்கிரீம் பெட்டி ஒன்றுக்குள் வைத்து  வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது.

கே- அதன் எடை என்ன..?

ப- சுமார்  பத்து  முதல் பதினைந்து  கிலோ  இருக்கும்..

கே- அங்கு சோதனை முகாம் இல்லையா..?

ப- அங்கு பல தடைமுகாம்கள் இருக்கின்றன.

கே- இந்தக் குண்டு எப்படி  அங்கு கொண்டு செல்லப்பட்டது..?

ப- எல்.ரி ரி.யினர்  ஐஸ்கிரீம் பெட்டிக்குள்  வைத்துக் கடத்தியுள்ளனர்.

கே- எல் ரி ரி யினரிடம்  வெடி மருந்துகள் இருக்கின்றனவா..?

ப- ஆம்.

கே—அவர்களுக்கு எங்கிருந்து  அவை கிடைத்தன...?

ப—தமது  வழமையான வழிகளில் பெற்றிருக்கக் கூடும்.

 

 தாக்குதல்களை  கண்டிக்க வேண்டும்.

-தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர். எம். சிவசிதம்பரம்.

தமிழ்-முஸ்லிம் உறவை குலைக்க  தீய  சக்திகள் முயற்சி—கிழக்கு மாகாண  சிவில் இணைப்பதிகாரி எம். அப்துல் மஜீத் ---

௦௦  OOO 


‘’ சேமன் காக்கா...எரத்தத்துக்கு  எரத்தம்  எடுத்துட்டன்  காக்கோவ்...

“அடப் பேயா...எப்பிடிடா..? எப்பிடிடா...?

“கையக் கட்டி அருவாக் கத்தியால வவுத்துல  குத்திட்டன்.. எண்ட  கடவுளே..ண்டு  கத்தினான்..திமிறிட்டு  ஓடப் பாத்தான் .... ஓட  ஏலாம போச்சு... கழுத்துல  இன்னொரு  வெட்டுக் குடுத்தன்..சுருண்டு  உழுந்துட்டான்... அதோட  வேல  செரி...

“ஆர்ராவன் ?

“ஆரே தெரியா.. ஐட்டிங்காட்டுல  மயில்வாகனம் சுரேஷ் –களுதாவளை எண்டு  இருந்துச்சு...எங்கேயோ கிளார்க்காம்...

“பாவம்டா...

“பொத்துரா நாய  வாய..  க்க்கும் ..சந்தை க்க   எண்ட  வாப்பாவும்  சொந்த  தங்கச்சியும்  வெடிச்சி  செதறி கெடந்தது  பாவம் இல்லியாடா...மாலிர மகனே...ஒண்ட  அக்கச்சா..மார்க்கட்டுல  வெடிச்சிப் பறந்திருந்தா  தெரிஞ்சிருக்கும்  எண்ட  வஞ்சம்...

“செரி..செரி..உடு,,,?  வேற  ஆறு  தம்ளனுகள்...?

“மாளியக் காட்டுல  வெச்சி   ஒரு வீரமுன தம்ளன்...மறுகா..ஒரு வெத்தில விக்க  வந்த  கெளவியாம் ....

“காயப்பட்டு  கல்முன ஆஸ்பத்திரிக்கி ஏத்தி  அனுப்பின  நம்முட சனத்த  அங்க  கவனிக்கல்லையாம்... கால்ல  ஒரு  சின்னக் காயப்பட்டவன் நம்முட  மம்மக் காசிமுட  காலையே களட்டி எடுத்துட்டானாம்  ஒரு  தம்ள  லாக்குத்தரு....

“நஞ்சி ஊசியும் அடிச்சிட்டானாம்  அங்க...

“அங்க இருந்த எல்லாரையும் ஏத்தி அம்பாரைக்கி  அனுப்பிட்டாஹளாம்..

“குண்டு வெச்ச  ஆரு ண்டு கதைக்குது  சனம்...?

“எல்டிட்டி தான்...  ஈப்பி பார்ட்டி  நாங்கதான்  ண்டு  நோட்டிஸ் ஓட்டியிருக்கானாம்..காரதீவுக்க...

காரதீவுக்க  எண்டா  ஈப்பிதான்  கூட...

“ஆரா இருந்தாலும்  தம்ளந்தான்...

“இதெல்லாம்  கேக்கப் பாக்க   ஆரு இரிக்கி...? எங்கடா  நம்முட  எம்பி மசிராண்டிகள்...?

“மீட்டிங் போடுறாங்களாம்

“ம்மாடைக்க போர்றான் ...இஞ்ச  சனம் கெடந்து  சாகுது...

“மறுகா  வருவாக வோட்டுக் கேட்டு

“அஷ்ரப் எம்பி வந்திரிக்காராம்

“ஆயுதம் கொண்டாந்திருக்காராமா ...

“இல்ல

“எங்களுக்கு  ஒரு மசிரும் வேணா..ஆயுதம்தான் வேணும்

“ஓங்காட்டு படையையும்  வேன் பெரமதாசா வந்து  கலைச்சிட்டான்...அதுக்குப் பொறகுதான் தம்ளனுக்கு  தகிரியம்  வந்த...இல்லாட்டி  சாஞ்சமருதுக்க  ஜிஹாத்து  இருக்கு ண்டு கொஞ்சம்  இந்தப் பக்கம்  வேற பயத்துல  இருந்த  அவனுகள்.,,,,,

“இன்னம்  ரெண்டு பேரு  மௌத்தாகி ஆஸ்பத்திரியில இருந்து மையித்து  வந்திரிக்கி,,,

“ஆர்ராருடா...

“மரக்கறி யாசீனும்...அரிசிக்கார  ஒசனும் ....ஓசன் பாவம்..மூணு  பொம்புளப் புள்ளயல்  இரிக்கி....

௦௦

 


பலியானோர் தொகை 26 ஆக  உயர்வு..

முஸ்லிம் கிராமங்களில் இரண்டு நாட்கள் துக்கம்  அனுஷ்டிப்பு.

காத்தான்குடி-ஏறாவூர் –சம்மாந்துறை முதலான  பகுதியெல்லாம்  ஹர்த்தால்- வெள்ளைக் கொடிகள்...

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு

சாய்ந்தமருது குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க  ஓய்வு பெற்ற மாவட்ட  நீதிபதி திரு. பி.டி.பி.  விஜேசேகர தலைமையில்  விசாரணைக் கமிட்டி ஒன்றை  பாதுகாப்பு அமைச்சு நியமித்துள்ளது.,இக்கமிட்டியின்  உறுப்பினர்களாக மாவட்ட  நீதிபதி  ஜனாப்.எம்.எச். காரியப்பர் , சிரேஷ்ட பொலிஸ் சுப்பிரீண்டன்  திரு,பி. அன்ரன் ஜெயநாதன் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர் ..பாதுகாப்பு அமைச்சின்  உதவிச் செயலாளர்  திரு. எஸ்,கே. ஜினசேனா  இக்கமிட்டியின்  செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ளார். ஆங்கில  சுருக்கெழுத்தாளராக ஜனாப். எம்.ஏ. அன்சார் கடமையாற்றுவார்.

சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு  மட்டு, ஐ,தே.கட்சி  அமைப்பாளர்  ஜனாப் ரிஸ்வி சின்னலேப்பே ,முஸ்லிம் ராஜாங்க அமைச்சின் செயலாளர்  அல்ஹாஜ்.எஸ்.எச்.எம். ஜமீல்  உட்பட பல உயர் அதிகாரிகள் வந்து  பாதிக்கப்பட்டோரின்  குடும்பத்தினருக்கு  ஆறுதல் கூறினர்.

 ஊர்காவல் படை சேவை மீண்டும் பெறப்படவேண்டும்

மாளிகைகாடு  எல்லையோரமாக பொலிஸ் நிலையம்  ஒன்று  அமைக்கப்படல் வேண்டும்

தமிழ் மக்களுடன்  ஒற்றுமையாக  வாழவே  விரும்புகின்றோம்

இவ்வாறு சாய்ந்தமருது குண்டு வெடிப்பு தொடர்பாக  விசாரணை செய்யும் குழுவுக்கு முன் வலியுறுத்தப்பட்டுள்ளது

சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலையில்  மேற்படி  குழு  விசாரணையை ஆரம்பித்த போது  கொல்லப்பட்ட  அல்லது  காயமடைந்தோரின்  சாட்சியங்களை பெறுவதில்லை என்றும்  சம்பவத்தை நேரில் கண்டோரிடமிருந்து மட்டுமே  தாம்  சாட்சியங்களைப் பெறுவர்  என்றும்  கூறப்பட்டது..இதனை அடுத்து  பெருமளவான பொது மக்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.

சாய்ந்தமருதில் நடைபெறும் தமிழ்  முஸ்லிம் சமாதான மாநாட்டுக்கு தலைமை தாங்க  முன்னாள் அமைச்சர்  முஸ்தபா  தயாராம்.

இதே முஸ்தபாவும் இன்னும் சிலரும்தான்  கடந்த 2.9.87வாக்கில் சென்னை சென்று புலித் தலைவர்களுடன் புலிகள் கூறும் “இஸ்லாமியத் தமிழர்கள்” என்ற சொல்லை  ஏற்றுக்கொண்டு நீங்கள்  முஸ்லிம்களுக்கு தருவதை தாருங்கள்..நாங்கள் உங்களுக்கு  ஆதரவாக இருக்கிறோம் என்ற ரீதியில் ஒப்பந்தம் செய்தவர்கள்...

அப்பாவித் தமிழர்கள் முஸ்லிம்களால் காப்பாற்றப்படல்

குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டோரால் அப்பாவித் தமிழ் சகோதரர்கள் தாக்கப்படாதிருக்கும்  பொருட்டு  நாம்  பல தமிழர்களை காப்பாற்றி  அவர்களது எல்லையோரங்களில் கொண்டு சேர்த்திருக்கிறோம்.

மீராலேப்பை முகம்மது காசிம்  ஹாஜியார்  சாட்சியம்

௦௦


“சேமன் காக்கோவ் ...நீலாவணையில வெச்சி  நம்மட வனுஸ் மாமாட லொரியக் கடத்திட்டானுகளாம் ஹாக்கோவ்....லொறி ரைவர் அமீனையும்  கிளீனர் ஆதம்பாவையும் மாடு போட்டுட்டானுகளாம் ....”

“காரதீவுக்குள்ள டியுட்டிக்கு போன   போஸ்ட்மாஸ்டர் ஹசன் திரும்பி வேரல்லியாம் ,,,ஊட்டுல  தேடிட்டு  கத்துதுகள் ...

“கலுதாவளைக்குள்ள  நாலு  முஸ்லிம்  ஆக்கள  எறக்கினயாம்..

“வீரமுனைக்க முஸ்லிம்  ஆக்கள்ள  டிப்பர்  ஒண்டு  பத்துதாம்

“சம்மாந்துறை மழுவா வட்டைக்க  வெட்டுக்குப் போன மூணு பேர்ர மையத்து வக்கடைக்க  கெடக்காம்...

“ரோட்டால  வார  ஒரு தம்ளனையும்  உடப்போடா ..வெட்டி  அரியனும் .....ஒவ்

“ஒத்தனும்  வர மாட்டான்....

“இல்லாட்டி இஞ்சால விபுலானந்தர்  ரோட்டுல  பூருவம்...

“அவிசரப்படாதடா நாயே ....செஞ்சிலுவப்படையும்  அவனுகளுக்குத்தான் சப்போட்டுப் பண்றான்..காயப்பட்ட  நம்மட  ஆக்கள் ஒருத்தனையும்  அவனுகள்ள  வாகனத்துல  ஏத்திட்டுப் போகல்ல..வைத்திய  ஒதவியும்  செய்யல்ல..

“செஞ்சிலுவ  வாகனத்தைக் கடத்தி வெள்ளக்காரிய  கடத்தி புள்ளயக் குடுத்தா  செரி....

“ஓ..குடுப்பாய் ..குடுப்பாய் ...மறுகா  ஒங்கும்மாக்கு  புள்ள  இல்ல..

“மறுஹா  என்ன  ஹாக்கா... நாம  இப்பிடியே இருக்கிறானா..? ..சிங்களவனும் அடிக்கான்..தம்லனும் அடிக்கான்... நமக்கிட்ட  ஆயுதம் இல்லியே... 

“அதுக்குத்தான்  தலைவரு செல்ற...முதல்ல  நாம  ஒத்துமைப் பட்டு ஒரு அணியில  நிக்கணும்.. சிங்கள கட்சிகள  நம்ப்பப் போடாது...எண்டு.. நம்மட  நாய்கள்  சிங்கள அரசாங்கத்துல சேர்ந்துட்டு...மினிஸ்ட்டரு ...எம்.பி... எண்டு சூப்பிக்கிட்டு திரியக்குள்ள  நாம  பொதுமக்கள்  என்னடா செய்ற,,,?

“எங்க  ஹாக்கா... வந்த எம்பி மாரெல்லாம்..?

“சமாதானக் கூட்டம் நடத்துறாங்களாம்...

“என்ன  மயிரு சமாதானம்.. வேனுகளுக்கு  மொதல்ல  செருப்பால அடிக்கணும்...

“மாசிது  ஓடியாறான்....என்னையோ..?

“பள்ளி ஆக்கள்  என்ன செல்றாஹ..?

“தொழுகி  துஆ  கேக்கட்டாம்..

“எண்ட  அல்லாவே...

“என்னடா..மாசிது..?

“வண்டு ரோட்டுல ரெண்டு  புலி மொட்டச் சைக்கிள்ள வந்து கேரனைட்டு எறிஞ்சிட்டு  ஓடிட்டானுகள்  ஹாக்கோவ்...

“மருஹா..?

“நம்முட  காதரு அவடத்தையே உழுந்துட்டானாம்...ஒடன சீவன்  பெய்த்து ... மம்மாக்கான் அம்புட்டு தலையில  எரத்தம்  வாறு  வெய்க்குது..ஆஸ்பத்திரிக்கி அன்னா ஏத்திட்டு ஒர்றாஹ....

“என்..ன டா...

ஒங் காக்கோவ்.. கண்ணால  பாத்துட்டுத்தான்  ஓடியாறேன்....

வாடா..வாடா..போய் பாப்பம்...

௦௦

 

சாய்ந்தமருது குண்டு வெடிப்பின் எதிரொலி

கிழக்கில் பற்பல ஊர்களில் அசம்பாவிதங்கள்

இனக்கலவரமாக பரவும் ஆபத்து..

கல்முனைக்குடியில் கிரனைட் வீச்சு..ஒருவர் பலி.

 

ஐ.சி.ஆர்.சி.யின் பாரபட்சம் அம்பலம்.

யுத்தகால சேவை என்று கூறிக்கொண்டு பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு  சேவை செய்ய வந்த  செஞ்சிலுவைச்சங்கம் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களைக் கைவிட்டு  முற்று முழுதாக தமிழ் மக்களுக்கே  உதவி செய்வதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.. செஞ்சிலுவைச் சங்க வாகனங்கள் காரைதீவுக் கிராமத்தில்  ஓடித் திரிவதையும்  நிவாரண மற்றும்  உதவிகள் செய்வதையும் காணக்கூடியதாகவுள்ளது. இது பற்றி ஒரு முறைப்பாட்டையும் கிழக்கு மாகாண செஞ்சிலுவைச் சங்க தலைமையலுவலகத்துக்கு அனுப்பியுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்..

ஒப்பாரி இன்னும் ஓயவில்லை

Description: C:\Users\General\Desktop\New folder\IMG_20161020_115600.jpg

 

போராளிகளே புறப்படுங்கள்

இந்த  தமிழ் புலிப் பயங்கரவாதிகளின் இரத்த வெறியை  இன்னும்  எத்தனை காலத்துக்கு சகித்துக் கொண்டிருக்கப் போகிறோம் ? இன்று சந்தைக்குள்  குண்டு வைத்தவர்கள்  நாளைக்கு  நமது  ஜும்மா பள்ளிவாயிலுக்கும் நமது சிறார்கள்  பயிலும் பாடசாலைகளுக்கும்  குண்டு வைக்கமாட்டார்கள் என்பது  என்ன  நிச்சயம்..? சிங்கள அரசாங்கத்துக்கும்  புலிகளுக்கும் இடையில் திரை மறைவில் நடக்கும்  பேச்சுவார்த்தைகளும் கொடுக்கல் வாங்கல்களும் எதைக் காட்டுகிறது...? முஸ்லிம்கள் இன்று அரசியல் அனாதைகளாக அரசாங்கத்தாலும்  சர்வ தேசத்தாலும்  கைவிடப்பட்டு ஆயுத கலாசாரத்துக்கு மத்தியிலே தனித்து விடப்பட்டுள்ளனர். சிங்கள அரசாங்கத்தின்  அமைச்சுப் பதவிகளையும்  சில  அற்ப சொற்ப சலுகைகளையும் அனுபவிக்கும்  நமது  பாராளுமன்ற  பிரதிநிதிகள்  என்ன செய்யப் போகிறார்கள்...நமது தனித்துவம் காக்க  போராளிகளே புறப்படுங்கள்....ஒன்றே இறைவன்  ஒன்றே கட்சி..ஒற்றுமையே நம் பலம்

இப்படிக்கு

முஸ்லிம் காங்கிரஸ் மத்திய  குழு

சாய்ந்தமருது

௦௦

 

‘’ சேமன் காக்கா...கூட்டம்  நடக்குதாமே... போகல்லியா...

‘’போய்த்தான்  வந்த...டே...இஸ்மாலே .... இஸ்மாலே ... ஸ்கூலுக்க போ...அங்க குண்டு வெடிப்புல  மௌத்தான  ஆக்கள்ள  லிஸ்ட்டு  எடுக்காஹ...ஒண்ட  மகண்ட  பேரக்  குடுத்துட்டியா...நெவாரணம்  தருவாக...

“மசிரத் தெருவாஹ...நெவாரனமும்  வாணா ..ஒரு  மசிரும்  வேணா ...எண்ட  புள்ளைய  தா...

“எக்கோ...சலுஹா ....நீ போய்  பதிஞ்சிட்டியா...?

“ஓம் மனே... ரெண்டாயிரம்  காசி தாரயாம் .... எண்ட  மருமகண்ட  உஸ்ருக்கு ரெண்டாயிரமாம்.....ஹிகீ .....

“அதுக்கென்னஹா  செய்ற... நடந்தது  நடந்துட்டு... அல்லாட களா கத்ரு   எண்டு  பொருத்துட்டுப்  போறான்  நாம...

“எண்ட  அல்லோவ்....எண்ட  புள்ள  வாண்டு  மூணு  வருசம்தான்... இனி நான்  என்ன செயிறம்பி ...?

“கொளறாதஹா....அல்லாஹ்  இருக்கான்.....

“இது  எப்படாம்பி  முடியும்...?

“எதுகா ..?

“இந்த  தம்ளக் கட்டட  போராட்டம்...?

‘எங்கஹா  முடியிற,,,> ?  தமுள் ஈளம்  கெடைச்சாத்தான்  உடுவானுகள் போல ...

“நீ...வேணும்ன்டா  பாரு  மஹன் ..!  எண்ட  மருமகன  மட்டுமில்ல   ஒண்டும்  அறியாத  இந்த  அப்பாவிச் சனத்த....சும்மா  மார்க்கட்டுக்கு  சாமான்  வாங்க விக்க வந்த  பசுபதியான  சனத்தக்   கொண்டு  குவிச்சவன்  நெல்லாச்  சாக  மாட்டான்...   நீ   பாரு  மஹன் ..!.. பத்தி  எரியிற  எண்ட  வவுத்தோட செல்ரன்... அவனும் ஒரு நாளைக்கி  கொடல் வெடிச்சி ஒடம்பு  தெறிச்சித்தான் சாகுவான்...அள்ளா  ஒரு  நாளும்  இந்த  அக்குரமத்த  பொறுக்க மாட்டான்... இந்த  அக்குறும்புக்கு  ஒரு  முடிவு செய்..எண்ட  ரகுமானே.....  .

“ஆமீன்..ஆமீன்....யா  றப்பல்  ஆலமீன் ... 

௦௦-௦௦௦௦